திருச்சி : வடகிழக்குபருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் மற்றும் மாநகர கமிஷனர் பொன்மணி ஆகியோர் நேற்று மாநகராட்சி மண்டலம்-1க்கு உட்பட்ட வார்டு எண்.3ல் உள்ள வென்னிஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், கொசு புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள நீர்த்தேக்கங்களை கண்டறிந்து அகற்றுதல் மற்றும் வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று ஆய்வு செய்து, கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புகை மருந்து அடிப்பான் மூலம் முதிர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
தொடர்ந்து, தினந்தோறும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் குறித்த தகவல்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான பகுதிகளில் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆய்வின் போது, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர கமிஷனர் ஆகியோர் கேட்டறிந்தனர். பணிகளை மேலும் தீவிரப்படுத்த மாநகர நல அலுவலருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
மேலும், பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை விரைவுபடுத்த கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், வருவாய் வட்டாட்சியர் சேக் முகமது (திருச்சி கிழக்கு) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
