நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (செப்டம்பர் 22) ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17,649-ஆக உயர்ந்துள்ளது, இதுவரை தமிழகத்தில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். என கூறப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதால் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
