தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!
தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை சார்பில், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்கண்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:-
கல்லூரிகளில் உள்ள விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் இதர துறைகளின் தேவைகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரில் தமிழக அரசு 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடியும், பிற பல்கலைக்கழகங்களுக்கு ரூ.60, ரூ.80 மற்றும் ரூ.90 கோடிகளும் மாநில அரசு கிராண்டாக வழங்கப்படுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு (2026-27 ஆம் ஆண்டு) தேவையான நிதி குறித்து உயர்கல்வி மற்றும் நிதித்துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் மத்தியிலுள்ள மையப் பல்கலைக்கழகமாக இது பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் கல்வித் தரத்தை நமது மாநிலத்திலேயே வழங்கும் நோக்கில் கிரீன் ஃபீல்டு பல்கலைக்கழகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முந்தைய காலத்து நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 100 ஏக்கர் நிலம் என்பது 25 ஏக்கராகவும், ரூ.50 கோடி காஷன் டெபாசிட் என்பது ரூ.25 கோடியாகவும் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஊழலற்ற, மாணவர்களின் நலன்சார்ந்த திட்டமாகும்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வது ஐந்து வருட பிரச்சினையாக நடந்து வருகிறது. கடந்த முதல்வருக்கும் ஆளுநருக்கு இதனால் சண்டை ஏற்பட்டது. துணைவேந்தர் நியமனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தற்காலிகமாக சீனியர் பேராசிரியர்கள் பொறுப்பு துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 9,000 காலிப் பணியிடங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஆர்பி தேர்வு மூலம் முதல் கட்டமாக 2,700 பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
