Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்குன்றம் அருகே அனுமதியின்றி இயங்கிய தொழிற்சாலைகளுக்கு சீல்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, செங்குன்றம் அருகே அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகள், கிடங்குகளுக்கு பூட்டி சீல் வைக்கும் பணிகளில் புழல் வாட்டார வளர்ச்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். புழல் ஊராட்சி ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கிடங்குகள் அனுமதியின்றி இயங்கி வருவதாக முன்னாள் புழல் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் தொடுத்த வழக்கில், 6 மாதங்களில் அனுமதியின்றி இயங்கும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், 6 மாதங்களை கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 64 கட்டிடங்கள் உரிய அனுமதியின்றியும், அனுமதிக்கு மாறாக விதிகளை மீறியும் இயங்கி வருவது கண்டறியப்பட்டு, புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், விமலா ஆகியோர் மேற்பார்வையில் சீல் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பிளாஸ்டிக் பொம்மைகள் கிடங்கிற்கு சென்ற அதிகாரிகள் உரிய அனுமதியில்லாததால், அதில் பணியாற்றி வந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதித்தனர்.

தொடர்ந்து, உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வரும் நிறுவனம் என வாயிலில் வட்டார வளர்ச்சி ஆணையரின் அறிவிப்பினை ஆணையாளர்கள் ஒட்டினர். ஷட்டரை இறக்கி பூட்டி, துணி சுற்றிவைத்து அதில் சீல் வைத்தனர். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மறு உத்தரவு பெற்று வந்தால் சீல் அகற்றப்படும் என நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, அரிசி ஆலை ஒன்றை அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர். அப்போது, அத்தியாவசிய உணவு பொருள் தயாரிக்கும் நிலையில் உடனே எவ்வாறு மூடுவது என நிர்வாகிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மேலும், அரவைக்காக நெல் மூட்டைகளை ஊற வைத்துள்ள நிலையில் ஆலையை மூடினால் அவை அழுகி பாழாகி விடும் என முறையிட்டு, ரூ.10 கோடி வரை வங்கி கடன் வாங்கி நெல் மூட்டைகளை வாங்கி அரிசி உற்பத்தி செய்து வருவதாகவும், அரிசி பழுப்பு நிறமாக மாறினாலும் அதனை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் தூக்கில் தொங்க வேண்டிய நிலை ஏற்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சில நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறி நேற்று மட்டும் 15 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கும் பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!