கோவை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளை அழைத்து வரவும் இறக்கி விடவும் வரும் நான்கு வாகன ஓட்டிகள் விதியை மீறி வாகனங்களை நிறுத்துவதோடு, பார்க்கிங் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. . கோவை விமான நிலையத்திற்கு தினமும் 3000 -க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்திற்கு வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், பயணிகளை இறக்கி விட அல்லது அழைத்து செல்ல ‘அரைவல்’ மற்றும் ‘டிபார்ச்சர்’ பகுதிகளில் 3 நிமிடங்கள் வரை மட்டுமே இலவசமாக நிற்க அனுமதியளிக்கப்படுகிறது.
3 நிமிடத்தைத் தாண்டி வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டால், அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.400 விமான நிலைய ஆணையத்திற்கும் (Airport Authority), ரூ.100 பார்க்கிங் ஒப்பந்த நிர்வாகத்திற்கும் செல்கிறது.
ஆனால், பல வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை அங்கேயே நிறுத்தி வைப்பதோடு, அங்கு பணியில் இருக்கும் வடமாநில பார்க்கிங் ஊழியர்களை கண்டபடி திட்டி தகராறில் ஈடுபடுகின்றனர். 11 நிமிடங்களுக்கும் மேலாக வாகனங்களை நிறுத்திவிட்டு, அபராதம் கேட்கும் போது ஊழியர்களிடம் ‘எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும், உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்’ என மிரட்டல் விடுக்கின்றனர்.
விதியை மீறும் வாகனங்களுக்கு சக்கரங்களில் லாக் போடும் ஊழியர்களை, வாகன உரிமையாளர்கள் எட்டி உதைப்பதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதும் தொடர்கிறது. குறிப்பாக, அங்கு பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையான வாக்குவாதங்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பார்க்கிங் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 3, 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் அத்துமீறல்களின் வீடியோக்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முறைப்படி பார்க்கிங் வசதியைப் பயன்படுத்தாமல், பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தி அடாவடி செய்யும் நபர்கள் மீது கோவை விமான நிலைய நிர்வாகமும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
