அம்மாபேட்டை அவரி கொள்ளை தெரு பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த நகையை திருடி சென்ற இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அவரி கொள்ளை தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமரன். வயது 34. இவர் அம்மாபேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி காலை முத்துக்குமார் வீட்டிலிருந்து கடைக்கு சென்று விட்டார். பின்பு அவரது மனைவி சரோஜினியும் அவரது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டை பூட்டி வீட்டின் சாவியை இபி பாக்சில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்பு சரோஜினி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முத்துக்குமரன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் ஐயப்பன் வயது 23, நல்லவனியன்குடிகாடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் வயது 21 ஆகிய இருவரும் வீடு புகுந்து நகையை திருடியது தெரியவந்தது. இதை எடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 பவுன் நகையை போலீசார் மீட்டு அவர்களை சிறையில் அடைத்தனர்.
