வாக்காளர் பட்டியலின் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை, மோடி அரசின் கைப்பாவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடி உள்ளார்.
பிரதமரின் கைப்பாவையாக் செயல்படும் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய கார்கே, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்துள்ளார்.
எனவே தலைமை தேர்தல் ஆணையருடன் பணியாற்றும் சக அதிகாரிகளே கூட தலைமை ஆணையரை நம்புவதில்லை.எனவே தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் முக்கிய மாற்றங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கு அது குறித்த முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தி உள்ளார்.
முரண்பாடுகள் கண்டறியப்படும் இடங்களில், சுதந்திரமான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியல்கள் மற்றும் அது தொடர்பான அத்தியாவசியத் தரவுகளை, எளிமையான வடிவத்தில் அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும். முக்கிய தேர்தல் தரவுகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.
