ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கம் இன்ஸ்ட்ரக்டர் (Administrative cum Instructor – ACAI) பணியாளர்களை வெளிமுகமை முறையில் நிரப்புவதைக் கைவிட்டு, அரசே நேரடியாக ஏற்றுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இலக்கியா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சங்கத் தலைவர் செந்தில்நாதன் மற்றும் துணைத் தலைவர் தாஜ் நிஷா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில் வெளிமுகமை முறையைக் கைவிட்டு, தமிழ்நாடு அரசே நேரடியாகப் பணி நிரந்தரம் செய்து பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது 11 மாதங்கள் மட்டுமே வழங்கப்படும் பணியை, 12 மாத முழுநேரப் பணியாக மாற்ற வேண்டும். தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மாதத்திற்கு வெறும் 9,700 ரூபாய் என்ற மிகக் குறைந்த ஊதியத்தை மறுபரிசீலனை செய்து நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். டெண்டர் மற்றும் பி.ஓ.க்யூ விவரங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்தும், சம்பளத்தில் பிடிக்கப்படும் தொழில் வரி மற்றும் இதர வரிகள் முறையாகச் செலுத்தப்படுவது குறித்தும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். ஏ.சி.இ ஊழியர்களை மீண்டும் எமிஸ் இணையதளத்தில் இணைக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளைக் கேட்கும் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் தரப்பிலிருந்து வழங்கப்படும் நோட்டீஸ் மற்றும் மெமோ போன்ற அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
