தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் (செப்டம்பர் 28) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்தவகையில், கோவை அரசு மருத்துவமனையிலும் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
அவ்வாறு அமைச்சர் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மொபைலில் டார்ச் லைட் அடிக்க, அந்த வெளிச்சத்தில் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அமைச்சர் சம்பத்குமார் தங்க மோதிரங்களை வழங்கினார்.
இருட்டில் , மொபைல் டார்ச் வெளிச்சத்தில் தங்க மோதிரத்தை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வழங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
