ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு முழுவதும் நவம்பர் 5ம் தேதி ‘டூல் டவுன்’ போராட்ட நடத்தப்படும் என ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தின்போது சிக்னல் கோளாறு ஏற்பட்டால், ரயில்களை கையேடு முறையில் இயக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில் சேவை தாமதமாகும் சூழல் உருவாகலாம்.
ரயில்வேயில் ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களின் பணி முக்கியமானதாகும். ரயில் பாதையில் சிக்னல் கருவிகளில் கோளாறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக சென்று பழுதை சரிசெய்து ரயில் போக்குவரத்தை சீரமைப்பது வழக்கம். ஆனால், ‘டூல் டவுன்’ போராட்டத்தின்போது ஊழியர்கள் பணியில் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பதால், அந்த நேரத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டால் ரயில்களை மாற்று நடைமுறையில் இயக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிக்னல் அமைப்பு செயலிழந்துள்ள பகுதியில் ரயில்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிய பிறகே ரயில்களை அனுமதிக்க வேண்டியிருக்கும். இதனால் அந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதுடன், அடுத்தடுத்த ரயில்களும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. எனினும், பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது சிக்னல் கோளாறு ஏற்படும் இடம் மற்றும் அது நீடிக்கும் நேரத்தை பொறுத்தே அமையும்.
சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களுக்கு நீண்ட காலமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஆபத்து மற்றும் பணிச்சுமைக்கான சிறப்பு படி வழங்க வேண்டும், பணிநேரம் மற்றும் ஓய்வு தொடர்பான 2005ம் ஆண்டு விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும், பணி நேரத்தை பிரித்து வழங்கும் முறையை கைவிட வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
சிக்னல் கருவிகளில் கோளாறு ஏற்படும் போது, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எந்த நேரத்திலும் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், இதனால் அவர்களின் ஓய்வு நேரம் பாதிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து இந்திய ரயில்வே சிக்னல் பராமரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அலோக் சந்திர பிரகாஷ் கூறுகையில், கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் இறுதி கடிதம் அனுப்ப உள்ளதாகவும், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாடு முழுவதும் ‘டூல் டவுன்’ போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசியல்
இந்த போராட்டம் ஊழியர்களின் வழக்கமான ஓய்வு நேரத்தில் நடத்தப்படும் என்றும், சூழ்நிலையை பொறுத்து சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை போராட்டம் நடைபெறலாம் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிக்னல் கோளாறு ஏற்பட்டால், அதை சரிசெய்யும் வரை ரயில்களை கையேடு முறையில் இயக்க வேண்டியிருப்பதால், பயணிகள் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடலாம். குறிப்பாக, ஒரே நேரத்தில் பல பகுதிகளில் சிக்னல் கோளாறுகள் ஏற்பட்டால், ரயில் இயக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
