Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கி கொள்ளை முயற்சி…உபியை சேர்ந்த 2பேர் கைது…திருச்சி சிறையில் அடைப்பு

வங்கி கொள்ளை முயற்சி...உபியை சேர்ந்த 2பேர் கைது...திருச்சி சிறையில் அடைப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்றதாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவிலூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை சுமார் ஒரு மணியளவில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல்

வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. தொடர்ந்து, வங்கியில் கொள்ளையடிக்க முயன்றபோது, திடீரென அலாரம் ஒலித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் அஞ்சி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, வங்கி ஊழியர்கள் வந்து பார்த்தபோது, வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நான்கு பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தரப்பிரதேசம் விரைந்த தனிப்படை போலீசார், வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பஹீம் முகமது கான் (35), சலீம் (32) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து, இருவரையும் கரூருக்கு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த கொள்ளை முயற்சியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!