சென்னை: திருவொற்றியூரில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த ராகுல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியைப் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அச்சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அருகில் வசிக்கும் இளைஞர்களில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் சிலரைப் பிடிப்பதற்காகப் போலீசார் சென்றபோது, அங்கிருந்த சிலர் தப்பியோட முயற்சி செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரையும், அவருடன் இருந்த மற்ற நபர்களையும் பொதுமக்கள் பிடித்து தாக்கியுள்ளனர். இதில் ஒரு நபர் மட்டுமே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ராகுல் என்ற நபரை மட்டும் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர்.
மேலும் அறையில் இருந்த மற்றவர்களை பொதுமக்கள் தாக்கியபோது அவர்கள் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. காவல் துறை தரப்பில் இது கூட்டு பாலியல் வன்கொடுமை அல்ல என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் மட்டுமே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
