பாதை பிரச்சனையில் மோதல் – வாலிபர் மீது தாக்குதல்- 3 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் கோபி (25). இவர்கள் இருவருக்கும் இடையே பாதை பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்து 8-ந்தேதி தமிழ்ச்செல்வனின் மகன் அப்பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கோகுலுக்கு சொந்தமான எல்லைக் கம்பியை பிடுங்கி உள்ளார். இது தொடர்பாக கோகுலின் மனைவி, தமிழ்ச்செல்வனின் மனைவியிடம் , தகராறு செய்துள்ளார். இதுகுறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல், சந்தோஷ் சுந்தர்ராஜன் ஆகியோர் தமிழ்ச்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். மேலும் தமிழ்ச்செல்வனின் சரக்கு வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
பெண்ணை மிரட்டி ரூ 1.5 லட்சம் பணம் பறிப்பு – ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் 46 வயது மதிக்கத்தக்க பெண். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.78,45, 500 மற்றும் ரூ. 25 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்த ரவுடி திலீபன் (37) மற்றும் கரூர் குளித்தலையை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற குறிஞ்சி கோவிந்தன் (38) ஆகியோரை வைத்து அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஒன்றரை லட்சத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் திலீபன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
தனியார் நிறுவனத்தின் குடோனில் திருட்டு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (46) திருச்சியில் முன்னணி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இந்தக் கடைக்கு சொந்தமான குடோனின் பின்புறம் உள்ளே மர்ம நபர் நுழைந்து டிரைவரின் செல்போன் மற்றும் காப்பர் கம்பிகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து ரஜினிகாந்த் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
தூக்க மாத்திரைகள் தின்று வியாபாரி சாவு
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27). இவர் பழைய துணி மற்றும் இஸ்திரி தொழில் செய்து வந்தார் . இவர் சற்று மன வளர்ச்சிக் குன்றியவர் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி வீட்டிற்கு வந்தவர் 20 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சரக்கு வாகன மோதி முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த முபாரக் அலி (வயது 61). இவர் கடந்த 9ஆம் தேதி திருச்சி தில்லை நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலன்களை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பிராட்டியூரில் கஞ்சா விற்றவர் கைது
திருச்சி பிராட்டியூர் ரெட்டமலை சாலைப் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ( 46 )என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
