Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இங்கிலாந்தில் புலிக் கூண்டுக்குள் குதித்த நபர் பலி – பூங்கா மூடல்!

இங்கிலாந்தில் புலிக் கூண்டுக்குள் குதித்த நபர் பலி – பூங்கா மூடல்!

இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள யார்க்ஷையர் வனவிலங்கு பூங்காவில், பார்வையாளர்களுக்கான பகுதிக்கு வெளியே புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் ஒருவர் திடீரெனக் குதித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இருந்த ஆபத்தான சைபீரியன் புலி அவரைத் தாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவசரகால மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து அந்த நபருக்குச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும், அது தொடர்ந்து பாதுகாப்பான அடைப்புக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் சவுத் யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு நேரடியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்தத் துயரமான காட்சிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் எனக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வந்த வனவிலங்கு பூங்காவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!