செங்கல்பட்டின் பிரசித்தி பெற்ற ஹைரோடு சாலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் பல்வேறு கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏலம் விடப்படுவதும் வழக்கமாக நடக்கும். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தசரா திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தருவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனால் இங்கு 10நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நெருக்கடியான சூழலில், சாலையையொட்டி அமைந்துள்ள அறிஞர் அண்ணா பள்ளி வளாகத்தின் இருபக்கச் சுவர்களை இடித்துவிட்டு, அங்கு பெரிய ராட்சத ராட்டினம் அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழா தொடங்கி கடந்த 2 நாட்களாக இந்த இராட்டினத்தை இயக்கவில்லை, அனுமதி கிடைத்தவுடன் இயக்க திட்டமிட்டுள்ளனர். இதற்குச் சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளி வளாகத்தையொட்டி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிவுறையின் சுவரையும் சேர்த்து இடித்ததால், அங்கிருந்த கழிவுநீர் முழுவதும் வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவர்களின் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, சுவரை இடித்த நபர் திருவிழா முடிந்தவுடன் மீண்டும் கட்டித் தருகிறோம் என்று அலட்சியமான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசு பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரையும், கழிவறை சுவரையும் உடனே கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
