தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேம்பாலம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதி ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர், தலை நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் குறித்துப் புதியம்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய காரைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
