Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி அரசு பணி ஆணை வழங்கி ரூ.1.32 கோடி மோசடி – ஒருவர் கைது!

போலி அரசு பணி ஆணை வழங்கி ரூ.1.32 கோடி மோசடி – ஒருவர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 நபர்களிடம் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.1.32 கோடி மோசடி செய்து, தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, குமணன் சாவடி, குன்றத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (40) என்பவர் கடந்த மாதம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர், பிரபல மருத்துவர் என்றும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பிரிவில் சிறப்பு மருத்துவ ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரிவதாகவும் கூறி அறிமுகமானார்.

மேலும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், தனக்கு புதுக்கோட்டையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருவதாக என்னிடம் உறுதியளித்தார். இதனையடுத்து என்னிடம் அவர் போலி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பணி நியமன ஆணையை வழங்கி ரூபாய் 32 லட்சத்து 77 ஆயிரத்து 400 பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகப் புகாரில் கூறியிருந்தார்.

இதேபோன்று மேலும் மூன்று நபர்களுக்கும் சுரேந்தர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி, நான்கு பேரிடமும் மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரத்து 900 பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து முகமது இப்ராகிம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுரேந்தரை கைது செய்ய, ஆவடி காவல் ஆணையாளர் டி.செந்தில்குமார் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு பொறுப்பு) ஜி.வனிதா மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் பாலமுருகன் ஆகியோரின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த சுரேந்தரை கைது செய்து நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!