குளித்தலை அருகே கீழ குறப்பாளையத்தில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பரமசிவம் என்பவரின் வீட்டின் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் காவிரி நீர் வீணானது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழக்குறப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து கோட்டமேடு, அய்யர்மலை, தோகைமலை வழியாக மணப்பாறைக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதனால் இந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் செல்லும் பாதையில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கீழக்குரப்பாளையத்தில் உள்ள பரமசிவம் என்பவரின் வீட்டின்

முன்பு காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீச்சி அடித்து வெளியேறியது.
அப்போது வீட்டின் முன்பு கட்டுமானத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கல்கள் சிதறி சாலையின் அருகே கிடந்தன.
மேலும் காவிரி வெளியேறி அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் குளித்தலை வதியம் இணைப்புச் சாலையில் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் பரமசிவம் வீட்டின் வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி மற்றும் அங்கிருந்த ஆடு கோழிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குளித்தலை மணப்பாறை கூட்டு குடிநீர் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி சேதம் ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி வருகிறது எனவே அதனை முழுவதும் மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
