திருச்சி மாநகராட்சியின் 65-வது வார்டுக்கு உட்பட்ட செம்பட்டு என்.எம்.டி காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இயங்கிவந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடியிருப்புத் தேவைகளுக்காக, அத்தொழிற்சாலைக்கு எதிரே இவ்விடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாங்கள் குடியிருந்து வரும் இந்த முழு இடத்தையும் சிலர் கிரையம் (விலைக்கு) வாங்கியுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, தங்களின் வாழ்விடத்தைக் காக்கக் கோரி, திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென வழிமறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளை கைகளில் ஏந்தியும், தங்களுக்கு நீதி கேட்டும் முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். முதல்வரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைச் சாலையின் ஓரமாக அனுப்பிவைத்தனர்.
