கரூர் காந்திகிராமம் அருகே தீபாவளி சிறப்புப் பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதி சாய்ந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்; 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே காந்திகிராமம் பகுதியில் இன்று காலை தீபாவளி சிறப்புப் பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சாலையின் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த தீபாவளி சிறப்புப் பேருந்து, கரூர் காந்திகிராமம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
பேருந்தை ஓட்டுநர் ஆறுமுகம் ஓட்டிச் சென்றார். நடத்துநர் குமரேசன் உடனிருந்தார். அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை.
இந்நிலையில், இன்று காலை கரூர் காந்திகிராமம் அருகே உள்ள டபுள் டேங்க் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பேருந்து சாலையின் ஒரு பக்கமாக கவிழ்ந்தது இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீபாவளி சிறப்புப் பேருந்து டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
