சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த பணியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ் ஒன்றிய அரசு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூட வட மாநிலத்தை சேர்ந்த வர்களையே நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்ததாரார்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, சின்னசேக்காடு பகுதியில் வசித்துவரும் படித்த மற்றும்படிக்காத பொதுமக்கள் வேலை தேடி பல பகுதிகளுக்கு அலைகின்றனர். கொத்தனார், வர்ணம் பூசுவது, பள்ளம் வெட்டுவது போன்ற பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் செல்லவேண்டிய நிலைமையில் உள்ளனர். எனவே மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுவையில், ‘’மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், கோக் என கூடிய கரி துகள்கள் போன்றவற்றினால் ஏற்படும் மாசு காற்றில் கலந்திருப்பதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சிபிசிஎல் நிர்வாகம் அவற்றை ஏற்காமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
வேலைவாய்ப்பு கேட்டு போராடினால் எங்களை விரட்டி அடிக்கின்றனர். வேலை வாய்ப்பு கேட்கிறோம் என கூறி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய பிரமுகர்கள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் கமிஷனை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதி சிஎஸ்ஆர் நிதியாக சமூக நல மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும். ஆனால் அதையும் இவர்கள் முழுமையாக செய்வதில்லை. சிபிசிஎல் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு, சிஎஸ்ஆர் நிதி செலவிடுதல் ஆகியவை குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து குழு அமைக்க வேண்டும். திருவொற்றியூர் தொகுதியில் வேலையில்லாமல் சிரமப்பட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்’ என்றனர்.
