மதுரையில் பிரபல தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கடந்த 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த யூடியூபர் நிஷாந்த் தருமபுரியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுரையைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலமான நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான அவரது தோழி மீனாட்சி ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் தனிப்படையினர் மீட்டனர்.
இதற்கிடையே, கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான நிஷாந்தைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி வந்த நிலையில், தருமபுரியில் பதுங்கியிருந்த நிஷாந்தை இன்று (நவம்பர் 16) கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் நிஷாந்தின் தந்தை மற்றும் தோழி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய சந்தேக நபரான நிஷாந்தும் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதமுள்ளவற்றை மீட்பது மற்றும் கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணியைக் கண்டறிவது தொடர்பான விசாரணையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
