தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.35,000 வறட்சி நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் கூறியதாவது
நடப்பாண்டு எப்பொழுதும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டிய சூழலில், இந்த ஆண்டு

செப்டம்பர் 1-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் எந்த வித பயனும் இல்லாமல் போய்விட்டது.
அதை நம்பி விவசாயிகள் நெல் விதைத்து, நடவு நட்டு சாகுபடி செய்தனர். ஆனால் இந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பால் மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டதன் காரணமாக நடவு கருகி மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
தாங்கள் வைத்திருந்த பணத்தை முதலீடு செய்தும் எந்த வித வருவாயும் இல்லை. எனவே உடனடியாக தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று, ஏக்கருக்கு ரூ.35,000 வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரம்:
மேகதாது அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். உச்சநீதிமன்ற நீதிபதி உடனடியாக ஒன்றிய அரசை நிர்பந்தித்து, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து கர்நாடகாவில் ஆண்ட முதலமைச்சர்களும், தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற சிவக்குமாரும் தன்னிச்சையாக அணை கட்டுவோம் என அறிவித்து கொண்டிருக்கிறார்கள். அதனை உடனடியாக தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
