சென்னை: ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை மகாலிங்கபுரம், காவாங்கரை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவம்பர் 17ஆம் தேதியான இன்று தொடங்கி டிசம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை நேற்று மாலை திறந்து வைத்தார்.
இன்று முதலே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மண்டல பூஜை டிசம்பர் 27-ல் முடிவடைகிறது. அதன் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி திரக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜை காலங்களில் முன்பதிவு பெற்ற 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஜனவரி 20ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இடையே புதன்கிழமைகளிலும் நவம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை கொல்லம்- சென்னை சென்டர்ல் இடையே வியாழக்கிழமைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் கார்த்திகை 1ஆம் தேதி பிறந்த நிலையில் அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் குளித்துவிட்டு கோயில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகிறார்கள். இதனால் பெரும்பாலான ஐயப்பன் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஐயப்ப கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். மேலும் மகாலிங்கபுரம் பகுதியிலும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
