அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. அன்று பிராயச்சித்தா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார். தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கங்காதிவஸ் போன்ற பூஜைகள் இனி வரும் நாட்கள் நடைபெற உள்ளன. வரும் 22-ம் தேதி மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை மதியம் 1 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் கடந்த 16ம் தேதி இரவு கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நேற்றுமுன்தினம் மாலை நிறுவப்பட்டது.அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலை குறித்து மைசூரு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஸ்ரீகந்தப்பா கூறியதாவது.. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ள ராமர் சிற்பம்தான் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் இருந்து செதுக்கப்பட்டது. புவியியல் ரீதியாக மைசூரைச் சுற்றியுள்ள பாறைகள் ஆர்க்கேன் தார்வார் கிராட்டன் என்பதன் ஒரு பகுதியாக உள்ளன. 
