தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவர் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் என்றாலும், மருத்துவ படிப்புகளையும் படித்தவர்.
ஏடிஸ் வகை கொசுக்களால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசுக்கள் பட்டப்பகலிலேயே மனிதர்களை கடிக்கும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த ஏடிஸ் கொசு, மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும் நோய் பரவுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில், தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், நாட்டிலேயே முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை ஆய்வு செய்வதற்கான முயற்சியை தொடங்கியுள்ளோம். உலகிலேயே முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அந்தத் தடுப்பூசியை ஆய்வு செய்ய எந்த மாநிலமும் முன்வரவில்லை.
நாம்தான் முதல்முறையாக அதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஜப்பான் நிறுவனத்தின் அந்த டெங்கு தடுப்பூசி தமிழ்நாடு சூழலுக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறோம். அதன்பிறகே டெண்டர், கொள்முதல் எல்லாம் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்த தடுப்பூசியை முன்னோடி திட்டமாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மூன்று மாத இடைவெளியில் இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளை செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால், 80 சதவீதம் வரை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் அமைச்சர் அருண்ராஜ்.
