பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த காலங்களில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மேற்கு ஆசியா போர் பதற்றத்தால் பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. ஒரு லிட்டர் பால் 230 ரூபாய்க்கும், தயிர் 240 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு வகைகளில் உளுந்து 580 ரூபாய்க்கும், ராஜ்மா 550 ரூபாய்க்கும், வெள்ளை மூக்கடலை 430 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அரிசி ஒரு கிலோ 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி 2,700 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி 1,500 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 620 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
காய்கறி சந்தையில் தக்காளி 250 ரூபாய், பூண்டு 500 ரூபாய் மற்றும் இஞ்சி 450 முதல் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு 50 ரூபாய், வெங்காயம் 80 ரூபாய் மற்றும் எலுமிச்சை 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. பழங்களின் விலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. ஆப்பிள் 300 முதல் 400 ரூபாய் வரையிலும், ஒரு டஜன் வாழைப்பழம் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ என்று தெரிவித்தனர். இந்தியாவில் ஒரு ரூபாய் என்பது, பாகிஸ்தானில் அதன் மதிப்பு மூன்று ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

