சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில், 12 வயது தங்கையின் கண் அறுவை சிகிச்சைக்காக உருக்கமாக நிதி உதவி கேட்டுத் தொடங்கிய பதிவு ஒன்று, இறுதியில் போலியான மருத்துவ ஆவணங்கள் மூலம் நடத்தப்பட்ட மோசடி என்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்சிங் ரத்தோட் (Jay Singh Rathore) என்ற 16 வயது சிறுவன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது தங்கைக்குக் கண் அழுத்தம் (Glaucoma) மற்றும் விழித்திரை இரத்தப்போக்கு (Vitreous Haemorrhage) பாதிப்பு இருப்பதாகவும், டெல்லியில் உள்ள பிரபல ‘ஷ்ராஃப் கண் மையத்தில்’ (Shroff Eye Centre) அவசர அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை பறிபோய்விடும் என்றும் கூறியிருந்தார்.
ஏற்கனவே ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துவிட்டதாகவும், அடுத்தகட்ட சிகிச்சைக்காக இன்னும் ரூ.1.2 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறிய அவர், நல்மனம் படைத்தவர்கள் ரூ.10, ரூ.20 எனக் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
இந்த உருக்கமான பதிவைக் கண்டு கலங்கிய இணையவாசிகள், தங்களால் இயன்ற பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தனர். இதன் மூலம், பதிவு போட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் ரூ.1,58,282 நிதி திரண்டது. தேவையை விட அதிகமான நிதி திரண்டுவிட்டதாகக் கூறி, ஜெய்சிங் ரத்தோட் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, பணப் பரிவர்த்தனை எண்களையும் அழித்தார்.
நிதி திரட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே கதை தலைகீழாக மாறியது. டெல்லி ‘ஷ்ராஃப் கண் மையம்’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அவசர எச்சரிக்கை பதிவை வெளியிட்டது.
“எங்களது மருத்துவமனையின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையைப் பயன்படுத்தி போலியான நோயாளி விவரங்கள், மருந்துச் சீட்டுகள் மற்றும் மருத்துவக் கட்டண மதிப்பீடுகளைத் தயாரித்து சில நபர்கள் பணமோசடியில் ஈடுபட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற போலி கோரிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம்” என மருத்துவமனை நிர்வாகம் எச்சரித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும், நிதி அளித்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். சிலர் மருத்துவமனையை நேரடியாகத் தொடர்பு கொண்டு சோதித்தபோது, அத்தகைய நோயாளி அங்கேயே சிகிச்சை பெறவில்லை என்பது உறுதியானது.
சந்தேகங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, எக்ஸ் ஸ்பேஸஸ் (X Spaces) நேரலையில் வந்து விளக்கமளிக்க முயன்ற ஜெய்சிங் ரத்தோட், முன்னுக்குப் பின் முரண்பாடான பதில்களைக் கூறினார்.
முதலில் தங்கையின் சிகிச்சைக்காகவே பணம் கேட்டதாகக் கூறியவர், விவாதம் முற்றியதும், “தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் இவ்வாறு செய்ய நேரிட்டது” என்றும், “தான் செய்தது தவறுதான்” என்றும் ஒப்புக் கொண்டார். இருப்பினும், தான் தனிப்பட்ட சொகுசுக்காகப் பணத்தைப் பயன்படுத்தவில்லை என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி உண்மை என்றும் அவர் சாதித்தார்.
இதையடுத்து, நிதி வழங்கிய பலரும் தங்களது பணத்தைத் திரும்பத் தருமாறு (Refund) கோரிக்கை வைத்தனர். பணத்தைத் திரும்ப செலுத்தியதற்கான சில ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ஒரு ஆபத்தான சூழலில் அறியாத ஒரு நபருக்கு உதவ வேண்டும் என்ற நல்நோக்கத்தில் உடனடியாக ஒன்றிணைந்த இணையவாசிகள், இந்த மோசடி அம்பலமானதால் கடும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இத்தகைய போலித்தனங்கள், எதிர்காலத்தில் உண்மையிலேயே உதவி தேவைப்படும் எளிய மனிதர்களுக்கான கதவுகளையும் அடைத்துவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
