Skip to content
Home » தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 3வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டில் ரூ81.12 கோடியில் குறுவை சாகுபடி தொகுதிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.உரிய நேரத்தில் நீர் திறப்பதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 23 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் அடைவார்கள். டெல்டா விவசாயிகளுக்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும். வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3வது ஆண்டாக மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர் பெற்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்து தற்போது வரை அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சில திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன என நான் கேள்வி எழுப்பி இருந்தேன். நேற்றைய வேலூர் கூட்டத்தில் அமித்ஷா அவற்றுக்கு பதிலளிக்கவில்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்படவில்லை, பாஜகதான் அறிவித்தது. அதை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தற்போது வரை நிறைவேற்றபட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் தமிழக அரசுக்கு சிறப்பு திட்டங்கள் வரவில்லை. அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்குகிறது. திமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை தேவைப்படாத அளவுக்கு மருத்துவ கட்டமைப்பு இருந்தது.

தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை? எல்.முருகன் மற்றும் தமிழிசைக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!