Skip to content
Home » நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என  தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.  நாளை  ஆடிப்பெருக்கு என்பதால்  காலையிலேயே   குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள்.  புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு  புதிதாக தாலிப்பெருக்கு சடங்கு நடத்துவார்கள்.  இளம்பெண்கள், வாலிபர்கள்  விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி  மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.

சில இடங்களில்  முளைப்பாரியுடன் வந்து  வழிபாடு நடத்துவார்கள்.  மேட்டூர் அணை காவிரியில் கிடா வெட்டி வழிபாடு நடத்துவார்கள்.  தமிழகத்தில் காவிரி தொடங்கும் ஒகேனக்கல் முதல், காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை இந்த விழா எழுச்சியுடன் நடைபெறும்.

திருச்சியை பொறுத்தவரை, முக்கொம்பு, திருவரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கல்லணை,  கும்பகோணம், திருவையாறு என அனைத்து இடங்களிலும் இந்த விழா விமரிசையாக நடைபெறும். அதிகாலை 4 மணி முதல்  இரவு 8 மணி வரை  பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவார்கள். திருவரங்கம் அம்மா மண்டபத்தில் நாளை  லட்சகணக்கான மக்கள் திரளுவார்கள். இதற்காக மாநகராட்சி சார்பில்  பக்தர்களுக்கு  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக பெண்கள் உடை மாற்றுவதற்கான இடங்கள், கழிவறைகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தீயணைப்பு வீரர்கள்,  போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.நாளை சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

ஆடிப்பெருக்கை யொட்டி இன்றே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.  மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.800க்கும், முல்லை கிலோ ரூ.600-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.700க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500க்கும், செண்டு கிலோ ரூ.100க்கும், தக்காளி ரோஸ் கிலோ ரூ.250க்கும், செவ்வந்தி ரூ.280க்கும், அரளிப்பூ ரூ.200க்கும், மரிக்கொழுந்து ரூ.100க்கும், வாடாமல்லி ரூ.100க்கும், கோழிக்கொண்டை ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.700க்கும், முல்லை, பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்டவை ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல திருச்சியிலும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. நாளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!