கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய 4 பேர்: உடனே காரை நிறுத்தி முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் வினோத். ஆய்வுக் கூட்ட அவசரத்தையும் மீறி அவரது இந்த செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வளையப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேருக்கு, அந்த வழியாக காரில் சென்ற வேளாண்துறை அமைச்சர் வினோத் உடனடியாக உதவி

செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, நகரில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இன்று வருகை தந்திருந்தனர்.
கோவில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு, மாலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற உள்ள முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வளையப்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர்

பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் வாகனங்களில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்து சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
முக்கியமான ஆய்வுக் கூட்டத்திற்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோதிலும், விபத்தைக் கண்டவுடன் சிறிதும் யோசிக்காமல் அமைச்சர் தனது காரை உடனடியாக நிறுத்தச் சொன்னார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், தனக்குப் பாதுகாப்பாக வந்த காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் உதவியோடு காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அவர்கள் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டதை உறுதி செய்த பிறகே, அமைச்சர் அங்கிருந்து தஞ்சை கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவசரப் பணியிடையே மனிதநேயத்துடன் களத்தில் இறங்கி உதவிய அமைச்சரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
