கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290 கோடி ரூபாய் மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, இதுசம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்த புகார் தொடர்பாக 2019ம் ஆண்டே ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான் எனவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநில அரசை தடை செய்ய முடியாது என்பதால், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.