Skip to content
Home » திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Senthil

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார். அதை நாங்கள் விடமாட்டோம். நாங்கள் இல்லை நாம் விடமாட்டோம். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அது தெரியும். வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குதான் அது மதப்புயல் இங்கே அது மடப்புயல். இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும், அருள்மொழி போன்றவர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். நீட் தேர்வுக்கு முன்பே அந்த காலத்தில் அவர்கள் ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மருத்துவ கல்லூரிக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்?

நம் பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு திட்டத்தை தொடங்கியவர்கள், இப்போது அதே திட்டத்தை நீட் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர். தந்தை பெரியாரின் தொண்டர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் தொண்டர் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரியார் வழி வந்தவர். நமக்குள் நடப்பது பங்காளி சண்டை, இந்த பகையாளியை உள்ளே விட்டு விட கூடாது. இன்றைய காலத்தில் பெண்கள் சரிசமமாக உட்கார்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு கொள்கையும் சித்தாந்தமும் பெண்களிடம் ஆழமாக பதிய வேண்டும்.  காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். அதில் முட்டையை கொடுத்தது கருணாநிதி, அதை சிற்றுண்டியாக மாற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பொதுவாக ஒருவருக்கு ஒருவர் மேல் காழ்ப்புணர்ச்சி இருந்தால் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் ஒரே சிந்தனை இருந்ததால்தான் இதுவரை தொடர்கிறது. முதல்-அமைச்சர் தலைமையில் இயங்கும் இந்த திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து நன்மைகளை செய்து கொண்டுதான் இருக்கும். வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை அழைத்து கொண்டு செல்லும். அறநிலையத்துறைக்கு அமைச்சர் சேகர்பாபு எப்படி அரணாக இருக்கிறாரோ அப்படி இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நாம் எல்லோரும் அரணாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!