பட்டுக்கோட்டையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 6 வயது சிறுமி ரோலர் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை
போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 6 வயது மாணவி வெ.ஹர்ஷினி ரோலர் ஸ்கேட்டிங்கில் 12 கிலோ மீட்டர் தூரத்தை 48 நிமிடங்களில் கடந்து அல்டிமேட் உலக சாதனை படைத்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் – யாழினி தம்பதியரின் மகளான மாணவி ஹர்ஷினி, இளம் தலைமுறையினரை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
பட்டுக்கோட்டை ஆலடிக்குமூளை அருகே உள்ள ரவுண்டானவில் தொடங்கிய இந்த சாதனை நிகழ்வை, திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அல்டிமேட் நிறுவனத்தின் சார்பில் முகம்மது சபீர் நேரில் பங்கேற்று மாணவியின் சாதனை முயற்சியை ஆய்வு செய்து பதிவு செய்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினரை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான, திறமையான தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகையை ஏந்தியபடி ஸ்கேட்டிங் செய்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவி ஹர்ஷினியின் சாதனையைப் பாராட்டினர்.
6 வயதில் ரோலர் ஸ்கேட்டிங்கில் 12 கிலோ மீட்டர் தூரத்தை 48 நிமிடங்களில் கடந்து அல்டிமேட் உலக சாதனை படைத்த மாணவி ஹர்ஷினிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
