Skip to content
Home » ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

  • by Senthil

சென்னை அடுத்த உத்தண்டியில் நேற்று  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்  இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.  மொத்தம் 50 ஆயிரம் பேர் அமரும் மைதானத்தில் 2 லட்சம் பேரை அடைத்தனர். இதனால்  பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்  இசை நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்குள் செல்லவே முடியவில்லை.

ஏற்கனவே  உள்ளே சென்றவர்கள் இருக்க இடமின்றி, நின்று கொண்டே இருந்தனர்.  பல்லாயிரகணக்கானவர்கள்  இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே செல்ல முடியவில்லை. இந்த நிகழ்ச்சியால்  சென்னை ஓ.எம்.ஆர். சாலையில்  நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல மணி நேரம்  வாகனங்கள்  போக்குவரத்தில் சிக்கி திணறியது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில்  நெருக்கடி காரணமாக யாரும் இசை நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் , மூச்சு திணறலில் சிக்கி  உயிருடன்  வெளியே போனால் போதும் என்ற நிலைக்கு வந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக  இருக்கைகள் ஏற்பாடு செய்யாததால்  டிக்கெட் வாங்கியவர்கள்  பல்லாயிரகணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல ரசிர்கள் அங்கேயே டிக்கெட்டுகளை கிழித்து எறிந்து ஆவேசமாக கூச்சலிட்டனர். இந்த களேபரத்திலும் கச்சேரி நடந்து முடிந்தது. இது குறித்து நெட்டிசன்கள் வலைதளத்தில் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து  தாம்பரம் காவல் ஆணையர்  அமல்ராஜ் விசாரணை நடத்துகிறார்.  இந்த சம்பவம் குறித்து இன்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறும்போது, இதுபோன்று  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறவர்கள் போக்குவரத்தை பாதிக்காதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.   டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரிக்க இருக்கிறோம். இது குறித்து விளக்கம் கேட்டு  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

உள்ளாட்சி, மின்வாரியம்,  மருத்துவம் ஆகிய துறைகளிடம் இதற்கு அனுமதி பெறப்பட்டதா என விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!