தமிழ்நாடு முழுவதும் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்காக ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று தனிநபர் பயன்பாட்டிற்காகவும் வண்டல் மண் எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் இருந்து விதிகளை மீறி வண்டல் மண் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினிக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் இன்று செந்துறை ஒன்றியத்திற்கு நேரில் சென்ற அரியலூர் ஆட்சியர் மிருணாளினி அங்கு ஏரி ஒன்றில் வண்டல் மண் எடுத்து கொண்டிருந்த டிராக்டர்களின் ஆவணங்களை பரிசோதித்தார்.
அப்போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட, கூடுதலான வாகனங்களில் வண்டல் மண்

எடுத்ததும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏரியில் அதிகமாக மண்வெட்டி இருந்ததையும் கண்டறிந்த ஆட்சியர் மிருணாளினி, உடனடியாக அங்கு இருந்த 10 வாகனங்களை பறிமுதல் செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 3 ஜேசிபி எந்திரங்கள் மற்றும் 11 டிராக்டர்கள் வண்டல் மண்களுடன் கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்துறை காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு வண்டல் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த்துறையினருக்கு, ஆட்சியர் மிருணாளினி உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வண்டல் மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் ஆட்சியர் ந.மிருணாளினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
