2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் என்பவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக ஒரு தனிநபர் வழக்கைத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர், இந்த வழக்கானது எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தனக்கு எதிராகப் பதியப்பட்ட இந்த தனிநபர் புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதன் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அவர்கள் ஜூலை 2 அன்று வழங்கினார். அப்போது, வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகாரில் நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து, பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்நிலையில் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் பொன்முடி நேரில் ஆஜராகாததால் நீதிபதி சவுந்திர பாண்டியன் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். வரும் செப்., 2ஆம் தேதிக்குள் பொன்முடியை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
