நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக 23 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக அந்த கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர் சில தினங்களில் சென்னை வருகிறார். சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் கூட்டணி தொடர்பான வியூகம் குறித்து ஆலோசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணி சேர பிரதானமான எந்த கட்சியும் முன்வராத நிலையில் என்ன செய்யலாம், அதிமுகவுடன் மீண்டும் பேசலாமா, அவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திந்தால் என்ன என்ற இரு அம்சங்கள் குறித்து அவர் கருத்து கேட்பார். இதற்காகவே அவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என கூறப்படுகிறது. அவர் டில்லி தலைமைக்கு கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.