Skip to content
Home » வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது.

ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.  குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் ‘டிரா’வில் முடிந்துள்ளது.

கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்தை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 85 ரன்கள் இலக்கை கூட எடுக்க முடியாமல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 77 ரன்னில் அடங்கிப் போனது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இது தான். இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘ஓவலில் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி இங்கிலாந்து கிரிக்கெட் மடிந்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. சில வாரங்கள் கழித்து இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்ற போது இழந்த ஆஷசை இங்கிலாந்து மீண்டும் கொண்டு வருமா? என்று அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது. இங்கிலாந்து கேப்டன் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

அதுபோலவே இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அச்சமயம் மெல்போர்னில் குழுமியிருந்த சில பெண்கள் கலை நயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இவோ பிலிக்கிடம் பரிசாக அளித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில் ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில் தான் ஆஷஸ் பெயர் உதயமானது. இவோ பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927-ம் ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது அது லண்டன் லார்ட்சில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி கோப்பைதான் ஆஷஸ் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!