Skip to content
Home » ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

  • by Senthil

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. இதனையடுத்து   நேற்று  இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். மேலும் அவர் பல ஜாம்பவான்களை முந்தி சாதனை பட்டியல்களிலும் இடம்பிடித்துள்ளார்.  இந்த நிலையில் ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீரென விலகியுள்ளார்.  அஸ்வினின் தாயார்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்  அவர் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த சவாலான நேரத்தில், கிரிக்கெட் வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு துணை நிற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அஸ்வின் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் கடைசி 3 நாட்களில் 10 வீரர்கள் மற்றும் 1 மாற்று வீரருடன் இந்தியா விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாற்று வீரர் பந்துவீசவோ , பேட்டிங் செய்யவோ முடியாது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!