Skip to content
Home » இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

  • by Senthil

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் ஓவரிலேயே பும்ரா குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பின்னர் முகமது சிராஜ் ஆட்டத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில்(16 பந்துகள்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமிந்தா வாஸ் உடன் முதலிடத்தை சிராஜ் பகிர்ந்துள்ளார். தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட், பும்ரா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 51 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியதோடு 8வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. துவக்க வீரர்கள் இஷாந்த் கிஷன் 23 ரன் (18 பந்து), சுப்மன் கில் 27 ரன்(19 பந்து) எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!