Skip to content
Home » ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Senthil

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8) இன்னும் 50 நாட்களில் அரங்கேற இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ஏதுவாக தங்களது திறமையையும், யுக்தியையும் மேம்படுத்த இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி எல்லா அணிகளுக்கும் நல்லதொரு வாய்ப்பாகும்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக எல்லா அணிகளும் சென்னை வந்து விட்டதுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தொடக்க நாளான இன்று  மாலை  4 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, ஜப்பானை சந்திக்கிறது.  இதனையடுத்து மாலை 6.15 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 25-வது இடத்தில் இருக்கும் சீனாவை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் ஆக்கி தொடரில் ‘நம்பர் ஒன்’ அணியான நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. அதே உத்வேகத்துடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

கடந்த முறை (2021) 3-வது இடமே பெற்ற இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி வாகை சூட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். உள்ளூர் சூழ்நிலை இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். எனவே இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சவாலை சமாளிப்பது சீனாவுக்கு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 7 ஆட்டங்களில் 6-ல் இந்தியா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!