Skip to content
Home » ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

  • by Senthil

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில்  நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.தொடர்ந்து பேட்டிங்  செய்த  இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது.

கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. பாகிஸ்தானை  இதுவரை இந்தியா இவ்வளவு அதிக ரன் வித்தியாசத்தில் தோற்கடித்ததில்லை.

இந்த போட்டியில் கோலி தனது 47வது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். இன்னும் 3 சதங்கள் அடித்தால் டெண்டுல்கர் சாதனையை அவர் முறியடிப்பார்.

நேற்று குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சமீப காலமாக பார்ம் இன்றி தவித்தனர். ரனகள் குவிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நால்வரும் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் கில் அரைசதமும், அதன் பின்னர் களம் இறங்கிய கோலி மற்றும் ராகுல் சதமும் அடித்து அசத்தினர். ரோகித், கில் கொடுத்த அதிரடி தொடக்கத்தால் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்தும், தகர்த்தும் வரும் விராட் கோலியின் பார்ம் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு மிகவும் முக்கியம். இவரது ஆட்டத்தை பொறுத்தே இந்தியாவின் மிடில் வரிசை எப்படி செயல்படுகிறது என தெரியும். உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியின் பார்ம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய கோலியால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளர். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்த சில பிரச்சினைகள் குறித்து கவலை அடைந்த ரசிகர்களுக்கு தற்போது நேற்றைய ஆட்டத்தின் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!