காந்திநகர்: ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 77 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சனா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் 77 கிலோ எடைப்பிரிவு போட்டியில் சீன வீராங்கனை குய்பாங் லியாவோ சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் கைப்பற்றினார். அவர் மொத்தம் 265 கிலோ (118+147 கிலோ) எடை தூக்கி முதலிடம் பிடித்தார்.
தென் கொரிய வீராங்கனை 260 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் சஞ்சனா 220 கிலோ எடை தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தப் பதக்கத்துடன் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கோமல் கோஹர், ஞானேஸ்வரி யாதவ் மற்றும் அஜித் நாராயணா ஆகியோரும் வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்தனர்.
