திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் குறவழிச் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கியை ஒட்டியே இந்த ஏடிஎம் மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து, கடப்பாரை மற்றும் சுத்தியலைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் விசில் சத்தத்தைக் கேட்ட மர்ம நபர், உடனடியாக ஏடிஎம் மையத்திலிருந்து வெளியேறித் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றபோதும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து ஏடிஎம் மையத்திற்குள் சென்று காவல்துறையினர் சோதனையிட்டபோது, அங்கு கடப்பாரை, சுத்தியல், கையுறைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடந்துள்ளன.
மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைத் தனது கையுறையால் மறைத்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் இருந்ததால், ஏடிஎம் கொள்ளை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ஏடிஎம் மையத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலேயே காவல்துறையினர் இதுவரை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யாத நிலையில், தற்போது மீண்டும் மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
புவியியல் காண்
இத்தகைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் ஏடிஎம் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஏடிஎம் மையத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில், தப்பியோடிய மர்ம நபரைக் கண்டறிந்து கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
