Skip to content
Home » ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் அதை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில்  ஆகஸ்ட் மாதம்  20ம் தேதி அதிமுக மாநாடு நடத்துகிறார். அதற்கு போட்டியாக  சேலத்தில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க   ஓபிஎஸ் இன்று சென்னை எழும்பூரில் தங்களது அணி  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட செயலாளர்கள், மண்டபத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த நோட்டில் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.

காலை 11 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வந்தார். தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு அவரை வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வம் தனியாக தனது அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினார்கள். அவர்களின் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் நிலையில் அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மிகப்பிரமாண்ட அளவில் மாநாடு ஒன்றை நடத்த அதில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் இந்த மாநாட்டை சேலம் அல்லது கோவையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள தொண்டர்களின் ஆதரவை தங்கள் அணிக்கு பெற முடியும் என்ற கருத்தை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். அதன்படி சேலத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை ஆகஸ்டு மாதமே நடத்தவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டை தொடர்ந்து சென்னையிலும் ஒரு மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, நிர்வாகிகள் மகிழன்பன், வக்கீல் எம்.வி.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஜே.கே.ரமேஷ், எம்.எம்.பாபு, ரெட்சன், அம்பிகாபதி , அழகு மருதுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் பேட்டி அளித்த ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவின் தங்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும், எடப்பாடியுடன் இனி எந்த  உறவும் கிடையாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!