Skip to content
Home » ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம்  சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.   டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தனர். அதிரடியாக அரை சதம் விளாசிய வார்னர் 56 ரன் எடுத்து (34 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்து மார்ஷ் – ஸ்மித் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷ் 96 ரன் (84 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் பிரசித் வசம் பிடிபட்டார். ஸ்மித் 74 ரன் (61 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சிராஜ் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 11, கிளென் மேக்ஸ்வெல் 5, கேமரான் கிரீன் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. கேப்டன் கம்மின்ஸ் 19 ரன், ஸ்டார்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 3, குல்தீப் 2, சிராஜ், பிரசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடினமான இலக்குடன்   இந்திய அணி களமிறங்கியது.  கேப்டன் ரோகித் – வாஷிங்டன் ஜோடி  தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கியது. 74 ரன்கள் சேர்த்தபோது, வாஷிங்டன் 18 ரன் எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் வெளியேற, ரோகித் – கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ரோகித் 81 ரன் (57 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), கோலி 56 ரன் (61 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் 48 ரன் (43 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மேக்ஸ்வெல் சுழலில் ஆட்டமிழக்க, இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.

அடுத்து வந்தவர்களில் கே.எல்.ராகுல் 26, ரவீந்திர ஜடேஜா 35 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்தியா 49.4 ஓவரில் 286 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 10 ஓவரில் 40 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஹேசல்வுட் 2, ஸ்டார்க், கம்மின்ஸ், கிரீன், தன்வீர் சங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 66 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!