தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா தம்பதியினர். கூலித் தொழிலாளர்கள் . இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஆதேஷ் ( 5) அனிருத் ( 2) ஆகிய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆதேஷ் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பிறந்தது முதல் நெற்றியில் பெரிய கட்டியுடன் உள்ளான். கைக்குழந்தையாக இருக்கும்போதே இவனுக்கு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் இந்த கட்டி அப்படியே உள்ளது. எனவே இந்த கட்டியை அகற்றுவதற்கு அதே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிறுவனின் தந்தை வாசுதேவன் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி தற்போது கால் சரி வர நடக்க முடியாமல் உள்ளார். எனவே சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அவர்கள் கூறும் போது, எங்களது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்கனவே வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விட்டோம். எங்களது குடிசை வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். தற்போது ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ உதவி வேண்டி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும், தஞ்சை கலெக்டருக்கும் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம். எனவே தனியார் மருத்துவமனையில் சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்கின்றனர்.