Skip to content
Home » அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம்  கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற இந்த அய்யர் மலையானது வாட்போக்கி மலை, காகம் பறவாமலை, ரத்தினகிரி மலை, ஐவர்மலை என்றும் சுவாமி மூலவர் வாட்போக்கி நாதர், முடித்தழும்பர், ராஜலிங்கர், மாணிக்க மலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த வருடம் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உற்சவர் அம்மாளுடன் சிறப்பு அலங்காரத்தில் நந்தி, கைலாசம், ரிஷபம், காமதேனு, சிம்மம், சேஷம்,பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும்

சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார்குழலி அம்மனுக்கு பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சுவாமி உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமிக்கு  அபிஷேகம் செய்தனர்.

இன்று துவங்கிய தேரோட்டமானது அய்யர்மலை நான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையினை பல்வேறு கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று நாட்கள் சுற்றி வந்து வரும்  24ம் தேதி மாலை நிலைக்கு வந்தடையும்.

தேரோட்டத்தையொட்டி அய்யர் மலையை சுற்றி கோவில் குடிபாட்டுகாரர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்,நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை தூவி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!