பலூன் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் பலூன் டெக்கரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்.
பலூன் விலை உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர்கள் அசோசியேஷன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான பலூன் டெக்கரேட்டர்கள் வண்ண பலூன்களை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டு, பலூன் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பலூன்கள் வானில் பறக்கவிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:-
பலூன் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பலூன்களின் விலையை 6 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பலூன்கள் எங்களுக்கு இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர்கள் அசோசியேஷனுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நம்பி உள்ளோம். எங்களுக்குத் தனி நலவாரியம் அமைத்துத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பலமுறை போராடியும், அரசாங்கமோ அல்லது உற்பத்தி நிறுவனங்களோ எங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆதரவற்ற நிலையில் தவிக்கும் எங்களுக்கு, இந்தத் திடீர் விலை உயர்வு மிகப்பெரிய வாழ்வாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனங்கள் 6 சதவீதம் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சில்லறைக் கடைக்காரர்கள் பாக்கெட் ஒன்றிற்கு ₹10 வரை கூடுதலாக விற்பனை செய்கின்றனர். இதனால், ஒரு டெக்கரேட்டருக்கு ஒரு நாளைக்கு 10 பாக்கெட்டுகள் வீதம் ₹100 கூடுதல் செலவாகிறது. இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு ₹3,000-மும், ஆண்டிற்கு ₹36,000-மும் ஒருவருக்குக் கூடுதல் சுமையாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து, இதன் மூலம் நிறுவனங்கள் பல கோடி ரூபாயை லாபமாக சம்பாதிக்கின்றன. ஆனால் நாங்களோ வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். உற்பத்தி நிறுவனங்களிடம் முறையிட சென்றால், எங்களை அலைக்கழிக்கிறார்களே தவிர, பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை.
எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். அதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். இறுதிக்கட்டமாக, பலூன் உற்பத்தி நிறுவனங்களின் முன்பாகவே அமர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவோம். எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.
